India

தாறுமாறாக சரிந்த கிரிப்டோகரன்சி மார்க்கெட்.. இந்திய அரசின் முடிவால் பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறாத நிலையிலும் சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியே கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல் வெளியானதையடுத்து, கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்துள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கிரிப்டோ கரன்சி மார்க்கெட் கடந்த 12 மணி நேரத்தில் கடும் சரிவைச் சந்தித்தது.

பிட்காயின் உள்பட பல கிரிப்டோ கரன்சிகள் அதிவேகத்தில் தாறுமாறாகச் சரிந்தன. எனினும், கடந்த சிலமணி நேரங்களில் சரிவில் இருந்து சில காயின்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளன.

Also Read: கிரிப்டோ கரன்ஸிக்கு தடை: டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவு?