India

“குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர்.. டாக்டர் கபீல் கான் பணி நீக்கம்” : திட்டமிட்டு பழிவாங்கும் யோகி அரசு!

உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவியபோது, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் கபீல் கான்.

ஆனால், உத்தர பிரதேச பா.ஜ.க அரசு, தனது தவறை மறைப்பதற்கு, மருத்துவர் கபீல்கான் மீதே பழியைத் தூக்கிப் போட்டது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், கபீல் கான் விடுதலையானார்.

விடுதலையானதில் இருந்து ஒன்றிய அரசின் மோசமான திட்டங்களுக்கு எதிராக தனது குரலைப் பதிவு செய்து வருகிறார். இதனால் பழிவாங்கும் நடவடிக்கையை அம்மாநில அரசு தொடர்ச்சியாக செய்து வருவதாக கபீல்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் உயிரிழப்பில் கபீல் கானுக்கு எந்த தொடர்பும் இல்லை என விசாரணை கமிஷன் தெரிவித்த போதிலும், அரசுப் பொறுப்பில் இருந்து கபீல்கானை விடுவித்த யோகி அரசு, தற்போது குற்றமற்றவர் என தெரிந்த பிறகும் மீண்டும் பணி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக கபீல்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆக்சிஜன் விநியோகத்திற்கு அரசு முறையாக பணம் செலுத்தாததன் விளையே 63 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். மருத்துவர், பணியாளர் என பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எந்தக் குற்றமும் புரியவில்லை என்று விசாரணைக் கமிஷன் அறிக்கை அளித்த பின்னரும், தன்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால், உண்மையான குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒன்றும் தெரியாத அண்ணாமலை வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்” : முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வைகோ விளாசல்!