India

“ஒரு டோஸ் கூட போடலையா..? அப்போ பெட்ரோல், ரேஷன் பொருட்கள் இல்லை” : கலெக்டர் உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் கொரோனா பரவியதை அடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாட்டில் இதுவரை 100 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து முதல் தவணை தடுப்பூசியை அதிகமான மக்கள் போட்டுள்ளதால், இரண்டாவது தவணைக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு தவணை கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது என மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத் ஆட்சியர் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் செவ்வாயன்று வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில், "ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது.

எனவே பணியில் இருக்கும் ஊழியர்கள் கொரோனா சான்றிதழ்களை மக்கள் காட்டிய பிறகே அவர்களுக்குப் பொருட்களை வழங்கவேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 74% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26வது இடத்தை பெற்றுப் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுட்டுக்கொல்லப்பட்டாரா மல்யுத்த வீராங்கனை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிஷா தாஹியா : நடந்தது என்ன?