India

கைதுக்கு பயந்து கால்வாயில் சீருடையை வீசிய போலிஸ்; விடாமல் துரத்திச் சென்று கைது செய்த ஊழல் தடுப்பு படை!

கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் உள்ள சந்திரசேகர புரா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோம்சேகர்.

அண்மையில் சந்திரண்ணா என்பவர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டியதாக அவரது வண்டியை சோம்சேகர் பறிமுதல் செய்தார். அதனை விடுவிக்க வேண்டுமெனில் 28 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என நிர்பந்திருக்கிறார்.

சந்திரண்ணாவால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாமல் போயுள்ளது. காசு கொடுத்தால் வண்டியை தருகிறேன் என்ற தொணியில் சோம்சேகர் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். வேறு வழியின்றி, 12 ஆயிரம் ரூபாய் தருவதாக சந்திரண்ணா சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் உள்ள கான்ஸ்டபிள் நயாஸ் அகமதுவிடம் 12 ஆயிரம் ரூபாயை கொடுக்கும்படி சோம்சேகர் கூறியிருக்கிறார். இந்நிலையில், சோம்சேகரின் இந்த செயல் குறித்து தும்கூரு ஊழல் தடுப்பு படை போலிஸிடம் புகார் சந்திரண்ணா தெரிவித்திருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விஜயலட்சுமியின் ஆலோசனையின் பேரில் சந்திரண்ணா ஏட்டு நயாஸிடம் 12 ஆயிரத்தை கொடுத்தபோது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் இந்த ஊழலுக்கு மூளையாக இருந்த சோம்சேகரை கைது செய்ய முற்பட்ட போது அவர் சுதாரித்துக் கொண்டு காவல் சீருடையை கால்வாயில் போட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பியோடியிருக்கிறார்.

ஓட்டம் பிடித்த சோம்சேகரை விடாமல் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்து கைது செய்ததோடு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Also Read: ‘என் பாக்கெட்டுனு நினைச்சு உங்க பாக்கெட்டுல’ - போலிஸுக்கு பளார் விட்டு ஜகா வாங்கிய பாஜக நிர்வாகி! Video