India

“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசதுரோக வழக்கு பாயும்” : மிரட்டல் விடுத்த உ.பி முதல்வர்!

உலக கோப்பை T20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்கு பாயும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

துபாயில் அண்மையில் நடந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் அவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, பாகிஸ்தான் வெற்றியை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸாக வைத்து அதில், ‛We won' எனப் பதிவிட்டிருந்தார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. மேலும், அவர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Also Read: 2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல்... பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்!