India

"ரூ.3 கோடி வரி கட்டுங்க.." : வருமான வரித்துறை நோட்டீஸால் அதிர்ச்சியடைந்த ரிக்‌ஷா ஓட்டுநர் - நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம், பகல்பூர் நகரத்திற்குட்பட்ட அமர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சிங். இவர் ரிக்‌ஷா வண்டி ஓட்டித் தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார்.

அப்போது, போலிஸார் புகாரை பதிவு செய்யாமல் விசாரிப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். பின்னர் இதுகுறித்து விசாரித்த போது, வங்கியிலிருந்து பான் கார்டு கேட்டதால், கடந்த மார்ச் மாதம் பிரதாப் பகல்பூர் பகுதியில் உள்ள ஜன் சுவிதா கேந்திராவில் பான் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு உண்மையான பான் கார்டுக்கு பதிலாக நகல் பான் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவரது நிஜ பான் கார்டை கொண்டு அவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் ஜி.எஸ்.டி எண்ணைப் பெற்றுள்ளார்.

இந்த எண்ணில் 2018 முதல் 2019 வரை ரூ.43,44,36,201 வர்த்தகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான் பிரதாப் சிங்கிற்கு ரூ.3,46,54,896 கோடிக்கு வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து இவரது பெயரில் யார் மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து போலிஸார் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

Also Read: Aashram படக்குழு மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் தாக்குதல் : இயக்குநர் மீது மை பூசிய கொடூரம்.. நடந்தது என்ன?