India
பெருவெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்த கேரளா... தி.மு.க சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
கேரளாவில் இடைவிடாது பெய்து வந்த மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பெருவெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தி.மு.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.
பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், தி.மு.க அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை தி.மு.க அறக்கட்டளையின் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் தி.மு.கழகம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!