India

“நவராத்திரிக்கு இந்த நிற உடை தான் அணியவேண்டும்... மீறினால் அபராதம்” : யூனியன் பேங்க் உத்தரவால் அதிர்ச்சி!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தமது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் பண்டிகையான நவராத்திரியை இந்துக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை அக்டோபர் 7 முதல் 15 வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ஏ.ஆர். ராகவேந்திரா நவராத்திரியையொட்டி 9 நாட்களும் வங்கி ஊழியர்கள் தினசரி ஒரு நிறத்தில் உடை என உடைக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அக். 7 அன்று மஞ்சள் நிற உடை எனத் தொடங்கி, அக். 15 அன்று பர்ப்பிள் நிற உடை என ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட நிற உடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், மாற்றி அணிந்தவர்கள் ரூ. 200 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்... யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?

நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இந்த நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல்.

நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: தாத்தாவின் கனவு நிறுவனத்தை மீட்டெடுத்த ரத்தன் டாடா... ‘ஏர் இந்தியா’ மீண்டும் டாடா வசமான கதை!