India
2 ஆண்டுகளாக 2 குழந்தைகள், மாமியாருடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்... தெலங்கானாவில் அவலம்!
தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் தினக் கூலியாகப் பணியாற்றி வருகிறார். சுஜாதாவின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததையடுத்து தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக சுஜாதாவின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், சுஜாதா தஞ்சமடைந்தார்.
அங்கிருந்தும் சில நாட்களில் அவர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர். வசிப்பதற்கு இடமின்றித் தவித்த சுஜாதா, அதே பகுதியில் அரசு கட்டிய பொது கழிப்பறையை வீடாக மாற்றி, கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
கழிப்பறையில் அமைந்திருந்த மலம் கழிக்கும் பகுதியை கடப்பா கல் வைத்து மறைத்து வைத்துள்ளார். மேலும், அந்த கழிப்பறையில் சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு போன்ற பொருட்களையும் வைத்துள்ளார்.
2 ஆண்டுகளாக, 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன், ஒரு சிறிய கழிப்பறையில் பெண் ஒருவர் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது நிலை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுஜாதா, “நானும், எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியே தூங்குவோம். 2 குழந்தைகள் உள்ளே தூங்குவார்கள். மழை பெய்யும் காலங்களில், குழந்தைகளை உள்ளே தூங்க வைத்துவிட்டு, நான் தூங்கவே மாட்டேன். எங்களின் நிலைமை யாருக்கு புரியும்?” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இதையறிந்த பஞ்சாயத்து நிர்வாகம், சுஜாதா வசித்து வந்த கழிப்பறைக்கு அருகிலேயே அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!