India

“பெகாசஸ் ஒட்டுக்கேட்பு : ஜனநாயகத்தின் 4 தூண்களையும் பலவீனப்படுத்தியுள்ளது மோடி அரசு” : சிவசேனா MP தாக்கு!

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. குழுமத் தயாரிப்பான ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ (Pegasus spyware) என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் 300 பேர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

செல்ஃபோனில் ஊடுருவி வேவுபார்க்கும் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற இந்த உளவு மென்பொருளை, அரசாங்கங்களுக்கும், அரசாங்க ஏஜென்சிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ததாக இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. குழுமம் கூறுவதால், இந்திய அரசுதான் இந்த மென்பொருளை விலைக்கு வாங்கி, உளவு வேலைக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதன் பின்னணியில் இருப்பதாக அவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஒன்றிய அரசோ அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசு ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனப்படுத்தியுள்ளதாக சிவசேனா செய்தி தொடர்பாளர் எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது கவலையைத் தெரிவித்தபோதும், ஒன்றிய அரசு அதனை மதித்ததாக தெரியவில்லை. இது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

ஒன்றிய அரசு பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களான நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவற்றை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என கூறுகின்றனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கையை மோடி அரசு ஏற்று விவாதம் நடத்தத் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்லோலே, ஒன்றிய அரசு பெகாசஸ் மூலன் கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசையும் கவிழ்த்தது.

அதுமட்டுமல்லாது, காங்கிரஸ் அரசை கவிழ்க்க இந்த ஸ்பைவேர்களையே ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி எழுப்பும் எந்த கேள்விக்கும் பா.ஜ.கவினர் பதிலளிக்காமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2008-ஆம் ஆண்டே ஒட்டுக்கேட்ட அமித்ஷா? : ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!