India
"ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்!
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராகேஷ் அஸ்தானாவுக்கு தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் பா.ஜ.க அரசின் சாயம் மீண்டும் வெளுத்திருக்கிறது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, அப்போதைய சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா நடவடிக்கை எடுத்துவிடாமல் தடுக்க பல வழிகளை மோடி அரசு கையாண்டதை நாடு அறியும்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில், அலோக் வர்மாவையும் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம் அரங்கேறியது.
ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்ததால்தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அலோக் வர்மாவுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளும் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவே அமைந்தன.
அதன் பின்னர், மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். கட்டாய விடுப்பில் அனுப்பிய ஒன்றிய அரசின் நடவடிக்கை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் சி.பி.ஐ இயக்குநர் பதவியில் அலோக் வர்மா அமர்ந்தார்.
அதன்பிறகு, அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. அவர் மீதான குற்றச்சாட்டு எதையும் விசாரிக்காமல், சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கி, ஜனநாயகப் படுகொலையை மோடி அரங்கேற்றினார்.
அதேசமயம், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பதவியை மோடி அரசு வழங்கியது.
2018ஆம் ஆண்டு மொயின் குரேஷி ஊழல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சனா சதீஷ், இடைத்தரகர்கள் மூலம் ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.2.95 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக அந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து தெரியவந்தது. இதுபோல, ராகேஷ் அஸ்தானா மீது அடுக்கடுக்கான பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
1984ஆம் ஆண்டு குஜராத்தில் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான அஸ்தானா, 2002ஆம் ஆண்டு கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து போன்ற சில முக்கிய வழக்குகளை விசாரித்தவர். தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக ராகேஷ் அஸ்தானாவுக்கு பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர்.
உச்சகட்ட நிகழ்வாக, வரும் 31ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த ராகேஷ் அஸ்தானாவை, டெல்லி காவல்துறை ஆணையராக மோடி அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதைப் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு, தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் சாயம் இதன் மூலம் மீண்டும் வெளுத்திருக்கிறது. நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!