India
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? - ரேஸில் முந்தும் அமைச்சர்கள்... இன்று மாலை முக்கிய அறிவிப்பு!
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவர் முதலமைச்சர் பதவிலியிருந்து விலகவேண்டும் என பா.ஜ.கவினரே குரல்கொடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார் எடியூரப்பா. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போதுகூட எடியூரப்பா, “முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. அதுகுறித்து வரும் தகவல்கள் வதந்தி” எனக் கூறினார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.கவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது கடமை” என்று பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி சென்ற எடியூரப்பா, தான் பதவி விலக வேண்டுமென்றால் தனது மகன் விஜயேந்திராவுக்கு முக்கிய பதவி அளிக்கவேண்டும் என பா.ஜ.க தலைமையிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அவரது வேண்டுகோளை பா.ஜ.க தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து எடியூரப்பா நேற்று கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற எடியூரப்பா சரியாக அதே நாளில் ராஜினாமா செய்துள்ளார். முதலமைச்சராக நான்கு முறை பொறுப்பேற்றும் எடியூரப்பாவால் முழுமையாக பதவிகாலத்தை பூர்த்தி செய்யமுடியவில்லை.
அடுத்த தேர்தலுக்குள் இளம் தலைவர் ஒருவரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு எடியூரப்பாவை பதவி விலகச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய முதலமைச்சருக்கான போட்டியில் பலர் இருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை அதிகரித்துள்ளது.
எடியூரப்பா அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராக இருந்துவரும் முருகேஷ் நிராணி, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளனர்.
பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட், கர்நாடக அமைச்சர் ஜெகதீஷ் சேட்டர், கர்நாடக சபாநாயகர் விஸ்வேஷ்வர ஹெக்டே, துணை முதல்வர் அஷ்வத் நாராயண், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பசன்கவுடா பாட்டீல் ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்வுசெய்யும் பணியில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி, தான் கர்நாடகா செல்லப்போவதாகவும், அங்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கர்நாடகாவின் புதிய முதல்வர் வரும் வியாழக்கிழமைக்குள் பதவியேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!