India

கண்ணீருடன் விடைபெற்ற எடியூரப்பா... பிடிவாதக்காரர் பின்வாங்கியது ஏன்? - பதவி விலகலின் பின்னணி என்ன?

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என மறுத்துவந்த எடியூரப்பா, ராஜினாமா செய்வதாக கண்ணீர்மல்க இன்று அறிவித்துள்ளதன் பின்னணியில் பா.ஜ.க தலைமையின் நெருக்கடியே காரணம் எனக் கூறப்படுகிறது.

தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அம்மாநில பா.ஜ.கவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்ததால் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.

எடியூரப்பாவிற்கு எதிராக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பா.ஜ.க எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவைப் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார் எடியூரப்பா. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போதுகூட, “முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. அதுகுறித்து வரும் தகவல்கள் வதந்தி” என எடியூரப்பா கூறினார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.கவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது கடமை” என்று பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி சென்ற எடியூரப்பா, தான் முரண்டு பிடிக்காமல் பதவி விலக வேண்டுமென்றால் தனது மகன் விஜயேந்திராவுக்கு முக்கிய பதவி அளிக்கவேண்டும் என பா.ஜ.க தலைமையிடம் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்ததாகவும், அவரது வேண்டுகோளை பா.ஜ.க தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து எடியூரப்பா இன்று கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நான்காவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற எடியூரப்பா சரியாக அதே நாளில் ராஜினாமா செய்துள்ளார்.

நான்கு முறையும் எடியூரப்பாவால் முழுமையாக பதவிகாலத்தை பூர்த்தி செய்யமுடியவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா 7 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக 2008ஆம் ஆண்டு முதல்வர் பதவியேற்று 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். பின்னர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் எடியூரப்பா 2011 மே மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனது மகன்களால் நடத்தப்படும் அறக்கட்டளைக்கு பயனளிக்கும் விதமாக, அரசு நிலத்தை பொதுமக்களுக்கு விற்கும் வகையில் மாற்றியதான இரண்டு வழக்குகளில், அந்த ஆண்டு 23 நாட்கள் அவர் சிறையில் கழித்தார்.

மூன்றாவது முறையாக 2018ஆம் ஆண்டில் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர் 6 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். பெரும்பான்மையற்ற அவரது அரசு கலைந்தது.

இதனால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த அரசை பா.ஜ.க பல்வேறு திரைமறைவு பேரங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்திக் கலைத்தது. பின்னர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தது.

75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.கவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கர்நாடக அரசியல் குழப்பம் காரணமாக அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

எடியூரப்பாவின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் மிச்சமிருக்கும் நிலையில் தற்போது உட்கட்சிக் குழப்பங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அடுத்த தேர்தலுக்குள் இளம் தலைவர் ஒருவரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு எடியூரப்பாவை பதவி விலகச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய முதலமைச்சருக்கான போட்டியில் பலர் இருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Also Read: பதவியேற்ற நாளிலேயே ராஜினாமா செய்தார் எடியூரப்பா... 4 முறையும் பாதியில் பறிபோன முதலமைச்சர் பதவி!