India

“எனது போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன்” - ஒட்டுக்கேட்ட மோடி அரசை சாடிய மம்தா பானர்ஜி!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம், இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்துப் பேசியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, “எனது போனும் ஒட்டுக் கேட்கப்பட்டது. இதனால், சரத் பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் என்னால் பேச முடியவில்லை.

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒன்றிய அரசு மற்றவர்களை உளவு பார்த்து வருகிறது. உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை.

பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. நீதித்துறையால் மட்டுமே நாட்டை காக்க முடியும். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

பெகாசஸ் மூலம் மோடி அரசு உளவு பார்ப்பதால் முன்னெச்சரிக்கையாக எனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிவிட்டேன். ஒன்றிய பா.ஜ.க அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லையெனில் நாடு அழிந்துவிடும்.” என விமர்சித்துள்ளார்.

Also Read: “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்க” - பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!