India

“16 கோடி நிதி கிடைத்தும் மித்ராவுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்” : ஒன்றிய அரசிடம் உதவி கோரும் பெற்றோர்!

நாமக்கல் மாவட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குழந்தை மித்ரா நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் குழந்தை மித்ராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் முதுகுத் தண்டுவட சிதைவு நோயால் மித்ரா பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நோயை குணப்படுத்த ஜி.எஸ்.டியுடன் 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியிடம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரும் தொகையை எப்படித் திரட்டுவது என பெற்றோர் வேதனையடைந்தனர்.

பின்னர் மித்ராவின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடினர். மேலும் சமூக வலைத்தளம் வழியாகவும் நிதி திரட்ட முடிவு செய்து, பலரின் உதவிகளை நாடினர். இதையடுத்து குழந்தை மித்ராவின் நிலையை அறிந்து பலரும் வங்கி கணக்கிற்கு நிதி உதவி செய்து வந்தனர்.

இப்படி பலரின் உதவியால் 16 கோடி ரூபாயை திரட்டிவிட்டனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து மருந்து வரவைப்பதால், இதற்கான இறக்குமதி வரியாக ஜி.எஸ்.டி 6 கோடி ரூபாய் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இதையடுத்து ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி குழந்தை மித்ராவின் பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், குழந்தை மித்ராவின் உயிரைக் காக்க இன்னும் பத்து நாட்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் ஒன்றிய அரசின் பதிலுக்காகப் பெற்றோர்கள் வேதனையுடன் காத்திருக்கிறார்கள்.

Also Read: “மாணவர்கள் வாழ்க்கை கல்வி முறையினை கற்றுக் கொள்ளும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்” : ஐ.லியோனி!