India

மத நல்லிணக்கம், முற்போக்கு சிந்தனையில் நாட்டிற்கே வழிகாட்டும் தென் மாநிலங்கள்... ஆய்வில் வெளியான தகவல்!

இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக மத அரசியலை முன்னெடுத்து வருகிறது. இருந்தபோதும் தென்னிந்தியாவில் மட்டும் அவர்கள் எவ்வளவு முயற்சி மேற்கொண்டு வந்தாலும் மத அரசியல் எடுபடாமல் உள்ளது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் தொடர்ச்சியாக ஒன்றிய அரசின் மத அரசியலுக்கு துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத நல்லிணக்கம், பரந்த மனம், முற்போக்கு சிந்தனையில் இந்தியாவிற்கே தென் மாநிலங்கள் முன்னோடியாக இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Pew Research Center என்ற நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த 17 மொழிகளைப் பேசும் 30 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஆய்வு ஒன்று மேற்கொண்டது. அதில் மதம் மிக முக்கியம் என்ற கருத்துக்கு வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 86%, மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 92% கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் 62% பேர் மட்டுமே மதம் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தனது மதமே உண்மையானது என்ற கேள்விக்கு வட இந்தியர்கள் 40%மும், மத்திய இந்தியர்கள் 55% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தென் இந்தியர்கள் 26% மட்டுமே தங்கள் மதமே உண்மையானது எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் 74% பேர் பிற மதத்தையும் மதிப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், வட, மத்திய இந்தியாவில் தன் மதமே உண்மை என்ற போக்கு அதிகரித்துள்ளதும் தெரியவருகிறது.

இஸ்லாமியர்களை நண்பர்களாக ஏற்கும் இந்துக்கள் என்ற கேள்விக்கு வட இந்தியர்கள் 56%, மத்திய இந்தியர்கள் 46% பேரும் ஆமோதித்துள்ளனர். அதேநேரம் தென் இந்தியர்கள் 75% பேர் இஸ்லாமியர்களை நண்பர்களாக ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் தான் மதங்களைக் கடந்து நட்பு பாராட்டுவது தெரியவந்துள்ளது.

அதேபோல், பெண்கள் மதம் மாறி திருமணம் செய்வதை எதிர்ப்பவர்கள் என்ற கேள்விக்குத் தென் இந்தியாவில் 37% பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால் வட,மத்திய இந்தியாவில் இந்த சதவீதம் மிக அதிகமாகவே உள்ளது. இப்படி கேட்கப்பட்ட பல கேள்விகளிலும் தென்னிந்தியா மட்டுமே இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பது தெரியவருகிறது.

மேலும், தனது சாதியில் மட்டும் நெருங்கிய நண்பர்கள் உள்ளோர், பெண்கள் சாதி மாறி திருமணம் செய்வதை எதிர்ப்பவர்கள், மாட்டிறைச்சி உண்போர் இந்து அல்ல என்று கூறுவோர், பன்றிக்கறி உண்போர் இஸ்லாமியர் அல்ல என்று கூறுவோர், இந்தியன் இந்துவாக இருக்கவேண்டும் என்று சொல்வோர், இந்தி பேசுபவரே இந்தியன் என்று கருதுபவர், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோர், மதச் சின்னங்களை அணிந்து கொள்பவர்கள் என கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் முற்போக்கான கருத்துகளைச் சொல்லி இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பது இந்த ஆய்வு முடிவுகள் வழியாக தெரியவந்துள்ளது.

Also Read: திமுக உறுப்பினர் என நினைத்து திருவள்ளுவரை தொடர்ந்து புறக்கணித்த அதிமுக - அமைச்சர் எ.வ.வேலு சாடல்!