India

நிர்வாக திறமையின்மை.. மக்களின் வரிப்பணத்தில் ரூ.4.4 லட்சம் கோடியை வீணடித்த ஒன்றிய அரசு : அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் சுமார் 478 பணிகள் ரூ.150 கோடிக்கும் அதிகமான செலவில் நடைபெற்றுவரக் கூடியவை. ஆனால், ஒன்றிய அரசு இந்தப் பணிகளில் உரியகவனம் செலுத்தி, குறித்த நேரத்தில் முடிக்காததால் திட்டமிட்டதைக் காட்டிலும் கூடுதலாக தொகை செலவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாடு முழுவதும் 1768 திட்டங்களுக்கு கணக்கீடு செய்யப்பட்ட செலவுத் தொகை ரூ. 22 லட்சத்து 86 ஆயிரத்து 955 கோடியே 18 லட்சம். ஆனால், இந்தத் திட்டங்கள் முடிவடையும் போது அவற்றின் மொத்த செலவு ரூ.27 லட்சத்து 27 ஆயிரத்து 220 கோடியே 47 லட்சமாக இருக்கப் போகிறது.

அதாவது செலவு ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 265 கோடியே 29 லட்சமாக அதிகரிக்கும் நிலை உள்ளது. இதில் 525 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. எனவே இவை திட்டமிட்ட காலத்தைவிட மேலும்தாமதமாக வாய்ப்புக்கள் உள்ளன. இவை சராசரியாக 46.36 மாதங்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

செலவு அதிகரிப்புக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு தொடர்பான தாமதம் அனைத்து திட்டங்களுக்கும் பொதுவான ஒன்று என்றாலும், ஒரு சில திட்டங்களில் பணிகள் விரைவில் முடிந்த போதிலும் திட்டம் குறித்த முடிவுகள் எடுப்பதில் தாமதம், பணிகள், கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதில் தாமதம், சட்ட ஒழுங்கு பிரச்சனையால் ஏற்படும் தாமதம் ஆகியவையும் முக்கிய காரணங்களாக இருந்துள்ளன. என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.