India

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ₹35,000 கோடி என்ன ஆனது? - மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரிய தடுப்பூசிக் கொள்கையை ஒன்றிய அரசு வகுக்காமல் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்துவதை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மாறுபட்ட விலை நிர்ணயம் செய்ததன் மூலம் 18+ வயதினருக்கு ஒரே சீராக தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநிலங்கள் தடுப்பூசி பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளன. எனவே தற்போதைய தடுப்பூசி கொள்கைை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டிசம்பர் 31 வரையில் வழங்கப்படவுள்ள தடுப்பூசி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

மாநில அரசுகள் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி வாங்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளனர். மூன்றாவது அவலை வந்தால் குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பு, அவர்களுக்கான தடுப்பூசி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தனியார் மருத்துவமனை மூலம் வழங்கப்படும் தடுப்பூசியை கண்காணிக்க மத்திய அரசு திட்டம் ஏதேனும் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு எப்படி செலவிட்டுள்ளது என்றும் இந்த நிதியிலிருந்து ஏன் 18+ வயதினருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதற்கு பதிலளிக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தடுப்பூசி ஆய்வுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

Also Read: “தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட்” : விழிப்புணர்வுக்கு பதில் பயத்தை விதைக்கும் யோகி அரசு !