India

கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.. மே மாதம் கற்று தந்த பாடத்தை ஒன்றிய அரசு உணர வேண்டும்: தினகரன் ஏடு!

மே மாதம் கற்று தந்த பாடத்தை உணர்ந்து, கொரோனா விஷயத்தில் அலட்சியம் செய்யாமல், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது என ‘தினகரன்’ ஏடு தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

கடந்தாண்டு இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கோரதாண்டவமாடியது. இதனால் சர்வதேச நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. அப்போது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் மீது தான் அனைத்து நாடுகளின் பார்வையும் இருந்தன. தரமான சுகாதார கட்டமைப்புகளை கொண்ட நாடுகளே திணறி வரும் வேளையில், இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்தது.

அந்த முதல் அலையில் சுதாரித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், 2வது அலையில் பெரும் பாதிப்பை தவிர்த்திருக்கலாம். ஒன்றிய அரசின் அலட்சியத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மே மாத துவக்கத்தில் இந்தியாவில் சராசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது.

குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பும், பலியும் அதிகரித்தது. மே மாத துவக்கத்தில் அதிகரித்த தொற்று எண்ணிக்கை, இறுதியில் குறைய துவங்கியுள்ளது. இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பிரதான தேவையாக இருந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மூன்றாவது அலையில் எந்த மாதிரியான தாக்கம் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்தால், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். இதில், ஒன்றிய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். முக்கியமாக, மருத்துவம் மற்றும் வைராலஜி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்பட வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. மாநிலங்களுக்கு கூடுதலாக தடுப்பூசி அளிப்பதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி மூலம் தான் கொரோனாவை வெல்ல முடியும். இல்லாவிட்டால் தொற்று எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. அதுவரை ஊரடங்கை லேசான தளர்வுகளுடன் தொடரலாம். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியம் மிக அவசியம் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது. இனியாவது ஒவ்வொருவரும் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும். உணவு பட்டியலில் நமது பாரம்பரிய உணவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

Modi - Amit shah

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை துல்லியமாக கூற முடியாது. ஏனென்றால், கொரோனா குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை அடையவில்லை. எனவே மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும்.

மாநில அரசின் தொற்று எண்ணிக்கை, தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பயன் பெறுவார்கள். இதில் பாரபட்சம் வேண்டாம். மே மாதம் கற்று தந்த பாடத்தை உணர்ந்து, கொரோனா விஷயத்தில் அலட்சியம் செய்யாமல், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிசத்தை நடுநடுங்க வைக்கும் மம்தாவின் உரிமைக் குரல்!