India

4 நாட்கள்.. 300 கிலோ மீட்டர்: மகனுக்காக சைக்கிள் மிதித்த தந்தையின் பாசப் பயணம் - கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

கர்நாடக மாநிலம், மைசூர் அருகே உள்ள கணிகனகோப் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கட்டுமான தொழிலாளியான இவரது பத்து வயது மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வருகிறார்.

மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் சென்றும் சிகிச்சை பார்த்து வருகிறார். சிறுவனுக்கு 18 வயது ஆகும் வரை தினந்தோறும் மாத்திரை கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், எப்படி குழந்தைக்கு மருந்து வாங்க செல்வது என குழப்பத்தில் இருந்துள்ளார் ஆனந்த். பின்னர் பெங்களூரு வரை சைக்கிளிலேயே பயணம் செய்வது என முடிவு எடுத்துள்ளார்.

இதையடுத்து ஆனந்த் தனது கிராமத்தில் இருந்து சைக்கிளில் இரண்டு நாள் பயணம் செய்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனந்தின் இந்தச்செயலை அறிந்த மருத்துவர்கள், மகனுக்கு தேவையானை மருந்துகளையும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் சைக்கிளிலேயே 2 நாள் பயணம் செய்து ஆனந்த தனது கிராமத்திற்கு வந்தடைந்தார். கொரோனா காலத்திலும், பெற்றோர் தனது குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பை எடுத்துக் காட்டும் செயலாகவே இது அமைந்துள்ளதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

Also Read: “ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BJPBetrayingTNPeople”: தடுப்பூசி விவகாரம் - தமிழகத்திற்கு துரோகம் இழைத்த பாஜக!