India
"மேற்கு வங்க தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது" : ஒன்றிய அரசுக்கு மம்தா பானர்ஜி திட்டவட்ட பதில்!
மேற்குவங்கம் மற்றும் ஒடியா மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் ஆய்வு செய்தார். பின்னர் மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்படி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில முதல்வர் 30 நிமிடம் தாமதமாக வந்தார். மேலும் பிரதமரிடம் மட்டும் தனியாகப் பேசிவிட்டு, உடனே கூட்டத்திலிருந்து வெளியேறினார். முதல்வர் மம்தாவின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மம்தா பானர்ஜியின் நடவடிக்கையால் கோபமடைந்த ஒன்றிய அரசு, அம்மாநிலத் தலைமைச் செயலாளரை திரும்பப்பெறுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை உடனடியாக விடுவித்து பணியாளர் பயிற்சி துறைக்கு மே 31ம் தேதிக்குள் அனுப்பிவைக்க உத்தரவிட்டது.
ஒன்றிய அரசு தலைமைச் செயலாளரை விடுவிப்பதற்கான அறிவிக்கப்பட்ட தேதி இன்றோடு முடிவடையும் நிலையில், தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை விடுவிக்க முடியாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில், "நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து அதற்கு எதிராகப் போராடி வருகிறோம். மேற்குவங்கத்திலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம். இந்த இக்கட்டான சூழலில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை டெல்லிக்கு அழைக்கும் செயல் ஏற்க முடியாதது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் திடீர் மாற்றம் ஏன்? இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒருதலைபட்சமானது. எனவே இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!