India

நாளை அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் : இந்தியாவில் Facebook, Twitter செயல்படுமா?

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பலர் பொய்யான கருத்துகளைப் பரப்புவதாலும், வன்முறையைத் தூண்டும் கருத்துகளை வெளியிடுவதாலும், சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ஓ.டி.டி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது.

மேலும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் மூலம் உலகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் ஒலித்தது. இதனால் ஆவேசமடைந்த மத்திய பா.ஜ.க அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசுக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது.

ஆனால், ட்விட்டர் நிறுவனம் சிலரின் பதிவுகளை மட்டும் நீக்கமுடியும் என்றும் மற்றவற்றை நீக்க முடியாது என்றும் கூறியது. இதனால் மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில்தான், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி டிஜிட்டல் ஊடக நெறிமுறைகளை மத்திய பா.ஜ. அரசு வகுத்து, அதை அரசிதழில் வெளியிட்டது. இந்த விதிகளை சமூக ஊடகங்கள் அனைத்தும் பின்பற்றுவதற்கான ஒப்புதலை வழங்கக் கோரி இன்று வரை காலக்கெடு விதித்திருந்தது. விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது.

இந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் தற்போதுவரை வாட்சப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அந்நிறுவனம் சார்ந்த இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் செயல்படாமல் முடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "இந்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எனினும், சில விஷயங்கள் குறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இவை குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. எங்களது தளத்தில் மக்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் உறுதியாக உள்ளது" என்றார்.

Also Read: “ஆக்சிஜன் உபகரணங்களின் வரி குறைய வாய்ப்பு” - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை!