India

கடந்த 4 மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 126 மருத்துவர்கள் பலி... IMA வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதீதிவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் தினசரி 4 லட்சத்திற்கும் மேல் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருவதால் மருத்துவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை பார்க்கும் மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிப்படையவே செய்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 126 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி வான்கேட்கர் கூறுகையில், கொரோனாவல் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள் குறித்தும், தடுப்பூசி தரவுகள் குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆவணப்படுத்தியிருக்க வேண்டும். இதை அவர்கள் செய்யவில்லை.

எனவே, இந்த தகவல்களை இந்திய மருத்துவ கழகம் சேகரித்து வருகிறது. மேலும் 94 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். மேலும் 63.5 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகச் சிறப்பு நிதியை இந்திய மருத்துவ கழகம் உருவாக்கியது. இதிலிருந்து 1.6 கோடி ரூபாய் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் இந்த ஆண்டில் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் மட்டும் 59 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரகாண்ட், மேற்குவங்கம், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் 162 மருத்துவர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தபோது, இந்திய மருத்துவ கழகம் இந்த எண்ணிக்கை தவறு என்றும், 734 மருத்துவர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காயத்ரி மந்திரம் கொரோனா தொற்றை குணப்படுத்துமா?” : ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய மோடி - அதிர்ச்சியில் மக்கள்!