India

முன்பதிவு செய்தவர்களுக்கு போட தடுப்பூசி இருக்கிறதா? - மீண்டும் மீண்டும் தோல்வியடையும் மோடி அரசு!

மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக 2020 மார்ச் 24 அன்று இரண்டு மணி நேர முன்னறிவிப்பு கூட இல்லாமல், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய நாளில் தொற்று எண்ணிக்கை 519 ஆகவும், இறப்பு 9 ஆகவும் இருந்தது.

ஆனால், இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.8 லட்சமாகத் தொடர்ந்து 8-வது நாளாக இருந்து வருகிறது. அதேபோல, இறப்பு எண்ணிக்கையும் 3-வது நாளாக 3 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவினால் இறந்தவர்களில் 4 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். இதன் மூலம் கொரோனா இறப்பில் உலக நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தை அடைந்திருக்கிறது. இதுவரை 1 கோடியே 88 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இத்தகைய மனித இறப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது ?

கடந்த ஆண்டு பொது ஊரடங்கை அறிவித்த மறுநாள் மார்ச் 25 அன்று பிரதமர் மோடி பேசும் போது, 'மகாபாரதப் போர் 18 நாட்களில் முடிந்தது. ஆனால், கொரோனா ஒழிப்புப் போர் 21 நாட்களில் முடிந்துவிடும்' என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசினார். கொரோனாவை ஒழிப்பதற்குக் குறைந்தபட்ச அறிவியல் பார்வை கூட இல்லாமல், முதலில் விளக்கை அணைக்கச் சொன்னார். பிறகு ஒளியை ஏற்றச் சொன்னார். அடுத்து கைதட்டி ஒலியை எழுப்பச் சொன்னார். அனைத்தையும் இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு செய்தார்கள். ஆனால், இதைச் செய்த 13 மாதங்களுக்குப் பிறகு கிடைத்த பலன்கள் என்னவென்று பார்க்கிறபோது, மிகுந்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து, வருமானத்தைத் துறந்து, எதிர்காலம் என்னவாகுமோ? என்ற கேள்விக்குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டாவது அலை வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிற நிலையில் கூட ஏப்ரல் 7 அன்று பிரதமர் மோடி பேசும்போது, 'கடந்த ஆண்டில் கரோனாவை ஒழிப்பதில் எப்படி வெற்றி கண்டோமோ, அதேபோல, இந்த ஆண்டிலும் வெற்றி காண்போம்' என்று நம்பிக்கையோடு கூறியது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. நாடு இன்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கிற நிலையைப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கக் கூடும் என்று அனுமானிக்கிற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் பிரதமர் மோடி இருந்திருக்கிறாரே என்பதை, மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

எனவே, கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி முற்றிலும் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக் கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாகவே இந்திய மக்கள் இன்றைக்கு மரண ஓலங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கூறுகிற அளவிற்கு நாட்டின் நிலைமையை அறியாதவர்கள் அல்ல. ஆனால், நாடு கொரோனா பாதிப்பினால் எதிர்கொண்டிருக்கிற அனைத்து அவலங்களுக்கும் பொறுப்பேற்று, குறைந்தபட்சம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்த்துவதற்காக மத்திய அரசின் அணுகுமுறையில் உள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்ட கீழ்க்கண்ட காரணங்களைப் பட்டியலிட விரும்புகிறேன் :

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா? மாநில அரசு போடுமா? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத்தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது? முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும்? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது?

கொரோனாவிலிருந்து மக்கள் உயிரைக் காக்க பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 186 கோடி டோஸ்கள் தேவை. 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 35 கோடி மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு இரண்டு டோஸ்கள் வீதம் 70 கோடி தடுப்பூசிகள் தேவை. இதில் 15 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1 டோஸ் போட்டவர்கள் 12.12 கோடி. இரண்டு டோஸ் போட்டவர்கள் 2.36 கோடி மட்டுமே.

ஆனால், இரண்டு தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்வதோ மாதம் 1 கோடியே 20 லட்சம் டோஸ்கள்தான். 18 வயதிற்கு மேற்பட்ட 93 கோடி மக்களுக்குத் தேவையான 186 கோடி தடுப்பூசி டோஸ்களை எப்போது தயாரிக்கப் போகிறது? எப்போது போடப் போகிறது? தற்போதுள்ள உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்த்து எத்தனை மாதங்கள் ஆகும் எனக் கணக்கிட்டால் திகில்தான் ஏற்படுகிறது. மக்களின் உயிரைக் காக்க ஒரே பாதுகாப்புக் கவசமாக இருக்கிற தடுப்பூசி போடுவதற்கு இரண்டு தனியார் நிறுவனங்கள் அல்லாமல் வேறு திறமைமிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை?

மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன்? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால், 1960களில் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தடுப்பூசி உற்பத்தி செய்கிற உரிமையை வழங்கி அம்மை, போலியோ, காலரா போன்ற கொள்ளை நோய்களைக் கடந்த கால அரசுகள் ஒழித்தது போன்ற அணுகுமுறையை மோடி அரசு கையாண்டிருக்க வேண்டும்.

இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர். 136 கோடி மக்களையும் ஒருசேர மரண பயத்தில் ஆழ்த்தியதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: திட்டமிட்டபடி தடுப்பூசி போடுவதில் சிக்கல்; 2வது தவணைக்கே முன்னுரிமை - அலட்சியம் காட்டும் மோடி அரசு!