India

“அரசு தோல்வியடைந்துவிட்டது.. நாம் மக்களுக்கு உதவுவோம்.. இதுவே காங்கிரஸின் தர்மம்” - ராகுல் வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தீவிர நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்கவேண்டிய பா.ஜ.க அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

பல மாநில அரசுகள், ஆக்சிஜன் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகின்றன. இந்நேரத்திலும், தடுப்பூசியைக் கூட இலவசமாக வழங்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது மோடி அரசு.

இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பதிவில், “சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. இந்நேரம் மக்களின் நலனைப் பற்றி பேசுவதுதான் முக்கியமானது. இந்த சிக்கலான நேரத்தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடிமகன்கள் அவசியம்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், உங்களின் அரசியல் பணியை ஒதுக்கிவைத்து, இந்திய மக்களுக்கு உதவுங்கள், உதவி்க்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம்.” என அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசும், மாநில அரசும் தோல்வியடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தி.மு.க கொரோனா தடுப்பு பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் காந்தி மக்களுக்கு உதவ வலியுறுத்தியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: "மணி அடிப்பதும், கடவுள் புராணம் பாடுவதும்தான் மோடியின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை” - ராகுல் காந்தி விளாசல்!