India

எங்கே போனது எம்.பி நிதி? : கொரோனா தடுப்பும் இல்லை.. தொகுதி நிதியும் இல்லை - மோடி அரசால் மக்கள் அவதி!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. சமீப சில நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என பா.ஜ.க அரசு கூறி வருகிறது.

கொரோனா தடுப்பூசி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், பா.ஜ.க அரசு தடுப்பூசிக்கு கூடுதல் நிதி ஒதுக்க முன்வரவில்லை. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்காததால் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தலைக் காரணம்காட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்தாண்டு பறித்தது பா.ஜ.க அரசு.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய அரசு இவ்வாறு ஜனநாயகத்திற்கும் எதிரான வகையில் நடந்துகொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் கோட்டைவிட்டு, தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தாமல் மெத்தனம் காட்டும் பா.ஜ.க அரசு, ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் நாடாளுமன்ற விரிவிக்கப்பணியை மேற்கொள்கிறது.

இந்நிலையில், பிடித்தம் செய்யப்பட்ட எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி, பெருமளவில் குவிந்துள்ள பி.எம் கேர்ஸ் நிதியை அனைவருக்கும் தடுப்பூசி வழங்க, கொரொனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கரூர் எம்.பி ஜோதிமணி, “இந்த நெருக்கடியான சூழலில் ரூ. 20,000 கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் ஆடம்பரமான சென்ரல் விஸ்தா ப்ராஜெக்டை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். கொரொனாவுக்கென்று பிடித்தம் செய்யப்பட்ட எம்.பி நிதி,பெருமளவில் குவிந்துள்ள பிஎம் கேர்ஸ் நிதியை அனைவருக்கும் தடுப்பூசி வழங்க, கொரொனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தவேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: தேர்தல் விளம்பரத்திற்காக மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என பொய் சொன்ன எடப்பாடி: ஆத்திரத்தில் விவசாயிகள்!