India

மனைவியின் விரல்களை வெட்டி வீசிய கணவன்... மத்திய பிரதேசத்தில் தொடரும் பெண்கள் மீதான வன்முறை!

மத்திய பிரதேச மாநிலம், பெத்துல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு வன்ஷ்கர். இவர் அடிக்கடி மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்றும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜு வன்ஷ்கர், மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது, கோடரியால் அவரது கை கட்டை விரலைத் துண்டித்துள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் மேலும் சில விரல்களையும் வெட்டி ஏறிந்துள்ளார். இதில் வலி தாங்காமல் அவர் துடிக்க அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ராஜு வன்ஷ்கரை கைது செய்தனர்.

இதேபோல், கடந்த மார்ச் 22ம் தேதியும், சாகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையின்போது மனைவியின் கையை கணவர் துண்டாக்கி, மனைவியை காட்டுப்பகுதியில் விட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் கொடூர குற்றச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 15 நாட்களில் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் மாநிலத்தில் அரங்கேறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சகோதரிகளின் கைகளை தங்கள் கணவர்களே வெட்டியது மிகக் கொடூரமான குற்றம்” எனக் குறிப்பிட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “ஊரடங்கால் அதிகரித்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” - தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!