India

“ஊரடங்கால் அதிகரித்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” - தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் எல்லோரும் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை உருவானதால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகமானது.

கொரோனா ஊரடங்கால், வீடுகளே பள்ளியாகவும், அலுவலகமாகவும் மாறியதால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு இரட்டிப்பானது. மேலும் ஊரடங்கு தொடர்ந்துகொண்டே இருந்ததால் வேலை இழப்பு போன்ற நெருக்கடிகளால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்குப் தள்ளப்பட்டன. அதேநேரத்தில், பெண்கள் மீதான வன்முறைகளும் ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டை விட, 2020ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை எண்ணிக்கை 23 ஆயிரத்து 722 அதிகரித்துள்ளதாகத் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருவதாகவும், இதில் நான்கில் ஒரு பங்கு பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறைகள்தான் என்றும், 2021 ஜனவரி முதல் மார்ச் 25 வரை ஆயிரத்து 463 புகார்கள் வந்துள்ளதாகவும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஏப்ரல் முதல் இப்போது வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 25 ஆயிரத்து 886 புகார்கள் வந்துள்ளன. இதில் 5 ஆயிரத்து 865 வீட்டு வன்முறைகள் சார்ந்தவையாகும்.

இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், "கொரோனா ஊரடங்கால், மன அழுத்தம் அதிகரிப்பு, பதட்டம், நிதிக் கவலை மற்றும் பெற்றோர்கள், குடும்பத்தினரிடம் ஆதரவு இல்லாதது ஆகியவை பெண்கள் மீதான வீட்டு வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நாடு விட்டு நாடு சென்று கலவரத்தை ஏற்படுத்திய பிரதமர் மோடி” : பங்களாதேஷ் போராட்டத்தில் 5 பேர் பலி!