India

“என் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறார்கள்; தடுக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்”- டி.ஆர்.பாலு எச்சரிக்கை!

தனது கைபேசி, மற்றும் வீடு, அலுவலகத் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சென்னை மண்டல பி.எஸ்.என்.எல். தலைமைப் பொது மேலாருக்கும், தொலைத் தொடர்புத்துறை செயலாளருக்கும் ஈ-மெயில் மூலம் டி.ஆர்.பாலு புகார் அனுப்பியுள்ளார்.

இதனை உடனடியாகத் தடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "எனது அலைபேசி எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் தகவல் பரிமாற்றங்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக என்னுடைய அடிப்படை உரிமையை மீறும் வகையில் பதிவு செய்யப்படும் எனது அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் விதிமீறல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தாங்கள் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வாயிலாக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்வேன் என்று இந்தக் கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “எப்படி அமைச்சரானீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா விஜயபாஸ்கர்?” - பதவி போகும் நேரத்தில் ஏன் சோக நாடகம்?