India
கொரோனா பரவல் தீவிரம்: இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு? - இன்று முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! #COVID
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் இருந்தது. இதையடுத்து, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததையடுத்து, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மறந்து வழக்கம்போல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 33% அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 14 நாட்களில் தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் அங்கு ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எப்படி இருக்கிறது என்றும், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களில் கொரோனா பரவல் தடுப்பதை குறித்துப் பேசப்பட உள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவியபோது திடீரென ஊரடங்குகளை அறிவித்து, மக்களை வாட்டி வதைத்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவதால் பா.ஜ.க அரசு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!