India

எல்லைப்பகுதியில் முகாம்களை அதிகரிக்கும் சீன ராணுவம்: ஏமாந்த இந்தியா - காட்டிக்கொடுத்த சாட்டிலைட் படங்கள்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் முதலே எல்லைப் பகுதியில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும் அதிகமாக எல்லைப்பகுதியில் குவிந்ததால், கால்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. இதில் இருநாட்டு இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு தரப்பு இராணுவத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, எல்லையில் குவிந்திருந்த இராணுவ வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கபெல்லா ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் சாட்டிலைட் கடந்த பிப்ரவரி 25ம் தேதி எல்லை பகுதியைப் படம் எடுத்துள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில், டெப்சாங் பகுதியில் சீன ராணுவம் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவிலேயே மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள Daulet Beg Oldie என்ற இடத்திலிருந்து வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில், சீன ராணுவம், புதிய கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளது. முதலில் இந்த இடத்தில் மூன்று கட்டிடங்கள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது சாட்டிலைட் வெளியிட்ட படத்தில், கூடுதலான கட்டிடங்கள், வாகனங்கள் தெரிகின்றன.

கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு இராணுவத்தினரும் மோதலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சீனா எல்லையில் குவிக்கப்படும் இராணுவத்தின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரித்தது. அப்போது குவிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் தங்குவதற்காக இந்தப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “பசுமையான கோவா, இனி வறண்ட பாலைவனம்?”: இரட்டை ரயில்பாதைக்கு அனுமதி கொடுத்த மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை!