India

“பசுமையான கோவா, இனி வறண்ட பாலைவனம்?”: இரட்டை ரயில்பாதைக்கு அனுமதி கொடுத்த மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை!

தென்மேற்கு ரயில்வேயின் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்காக 140 ஹெக்டேர் வனப்பகுதியை எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கேசில்ராக்கில் இருந்து தெற்கு கோவாவின் குளாம் பகுதிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக வனப்பகுதியில் நிலம் எடுப்பதற்காக மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 4ம் தேதி கோவா வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், கர்நாடகாவின் கேசில்ராக்கில் இருந்து தெற்கு கோவாவின் குளாம் பகுதிக்கு திட்டமிடப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதைக்காக 120.87 ஹெக்டேர் வனப்பகுதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த அனுமதி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "இரட்டை ரயில் பாதை திட்டம், வெறும் மரங்கள் நிறைந்த காடுகளை மட்டுமல்ல, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மகாவீரர் வனவிலங்கு காப்பகம், மொல்லம் தேசியப் பூங்கா ஆகிய சரணாலயங்களையும் அழித்துவிடும். மோர்முகாவோ துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை எடுத்து செல்வதற்காகவே இந்த இரட்டை ரயில் பாதை திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த அனுமதி காடுகளின் நலனுக்கே விரோதமான செயலாகும். இந்த இரட்டை ரயில்பாதை திட்டத்தால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, பல்லுயிர் பெருக்கத்திலும் பெரும் பாதிப்பு உண்டாகும்" என கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கூட உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச் சரிவுக்கு, மலைகளை குடைந்து இயற்கைக்கு விரோதமாக அனல்மின்நிலையங்களை அமைத்ததே காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இப்படி மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சுற்றுச்சூலுக்கு விரோதமாக திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி கொடுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “காரிலேயே கைகளில் முத்தமிட்டார்” - ராஜேஷ் தாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!