India

புதுச்சேரியில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி... மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை? - அடுத்து என்ன நடக்கும்?

புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளார்.

பா.ஜ.க-வின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.

இதனிடையே, புதிதாக அரசு அமைக்க எதிர்க்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், மாற்று அரசு அமைக்க எதிர்க்கட்சிகள் உரிமை கோரினால் ஒட்டு மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

ஆளுநர் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததால் சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சட்டசபை செயலர் ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இந்த அறிக்கையை வைத்து ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்ய உள்ளார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்யும். இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும். இதனால் ஆளுநரின் நேரடி மேற்பார்வையில் புதுச்சேரி அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும்.

Also Read: “செவிமடுக்காத அ.தி.மு.க அரசு; தி.மு.க ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!