India

“இனி கார்ப்பரேட் முதலாளிகள் கை நீட்டும் நபருக்கு அரசு பணி” : தனியார் வசம் செல்லும் செயலாளர்கள் நியமனம்!

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களை தனியாரில் இருந்து நியமிக்கும் மோடி அரசின் புதிய அறிவிப்பாணையை கடுமையாக விமர்சித்து தலையங்கம் தீட்டியுள்ளது தினகரன் நாளிதழ்.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற நாள் முதலே சமூக நீதி பல சரிவுகளை சந்தித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வு, யூ.பி.எஸ்.சி.தேர்வுகள் என தொடங்கி பின்தங்கிய வகுப்பினருக்கான வேலை வாய்ப்புகள் வரை அனைத்திலும் சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்பட்டு வருகிறது.

அதன் மற்றொரு வடிவமாக தற்போது மத்திய அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசின் முக்கிய இலாகாக்களை நிர்வகிக்கும் இணைச் செயலர்கள் பொறுப்பை தனியார் வசம் விட அரசு முடிவெடுத்துள்ளது.

அப்பொறுப்பிற்கு கூட்டு செயலாளர்கள் என்ற முறையில் 30 பேரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் வெளியில் இருந்தும், தனியார் துறையில் இருந்தும் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன் மூலம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும், சமூக நீதியையும் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க மத்திய அரசு முயல்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப் பதவிகளில் இதுநாள் வரை மத்திய பணியாளர் தேர்வாணையம் சுதந்திரமாக செயல்பட்டு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து வந்தது. தற்போது அதை தவிர்த்து 30 பேரை தனியார் துறைகளில் இருந்து தேர்வு செய்து கூட்டு செயலாளர்களாக நியமித்தால் நிர்வாகம் என்னவாகும்?

Also Read: "இடஒதுக்கீட்டை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது" - பா.ஜ.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

அந்தப் பணியிடங்களுக்கு யாரை தேர்வு செய்வர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்வாணைய நியமனங்களில் பொதுவாக இட ஒதுக்கீடுகள் முறையாகப் பின்பற்றப்படும். ஆனால், மத்திய அரசின் புதிய திட்டப்படி அரசை நிர்வகிக்கும் அதிகாரிகள் பணியிடங்களும் தனியார்வசம் செல்லும்.

மொத்தம் 13 அமைச்சகங்களின் இணை செயலாளர் உள்பட 27 இயக்குனர்களுக்குரிய பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அரசுத் துறைகளின் உயர் பணியிடங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கை நீட்டும் நபர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பெற இயலும்.

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு முறைகள், நேர்காணல், குறிப்பிட்ட கால பயிற்சிகள் அனைத்துமே கேள்விக்குறியாகும். மத்திய அரசின் அனுக்கிரகம் கிடைத்தால் இணைச் செயலாளர் தொடங்கி, செயலாளர் வரை அனைத்துப் பதவிகளையும் அடைய வழிவகுக்கும்.

ஒவ்வொரு துறையிலும் சமூக நீதியை தீயிட்டுக் கொளுத்தி வரும் மத்திய அரசு, விரைவில் அதற்குரிய பலன்களை அனுபவித்தாக வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துகளை கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதே நல்லது.

Also Read: “சுதந்திர இந்தியாவில் உருவாக்கிய அனைத்தையும் விற்பதுதான் மோடி அரசின் சாதனை” - முரசொலி தலையங்கம்!