India

ஆடையோடு அந்தரங்க பாகங்களை தொட்டால் பாலியல் குற்றமில்லை என்ற நாக்பூர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை!

கடந்த 2016ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் நாக்பூரைச் சேர்ந்த விசாரணை நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் என்ற நபரின் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

Also Read: பாதிக்கப்பட்ட பெண் மீதே நடவடிக்கை எடுத்த கட்சி.. பா.ஜ.க நிர்வாகி மீது எஸ்.பி அலுவலகத்தில் பாலியல் புகார்!

மேலும், சிறுமிகளின் ஆடைகளை களையாமல் அந்தரங்க பாகங்களை தொடுவது பாலியல் துன்புறுத்தலில் அடங்காது என்று நீதிபதி புஷ்பா கனேடிவாளா தீர்ப்பின் போது தெரிவித்திருந்தார்.

இந்த தீர்ப்பு நாட்டு மக்களை பதபதைக்கச் செய்ததோடு கடும் கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும். இது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் குற்றம் புரிபவர்கள் தப்பித்துக்கொள்வார்கள் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, மகாராஷ்டிர அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது

Also Read: “பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற இளைஞரை குத்திக்கொலை செய்த இளம்பெண்” : சோழவரம் காவல் நிலையத்தில் சரண்!