India
“மோடி அரசு அதிகார ஆணவத்தை கைவிட்டு உடனடியாக 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும்” : சோனியா காந்தி!
மோடி அரசு அதிகார ஆணவத்தை கைவிட்டு உடனடியாக மூன்று கறுப்பு வேளாண் சட்டங்களையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். குளிர் மற்றும் மழையில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுதான் மறைந்த விவசாயிகளுக்கு அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குளிரிலும், மழையில் டெல்லியின் எல்லைகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 39 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் புறக்கணிப்பு காரணமாக சிலர் தற்கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், இதயமற்ற மோடி அரசாங்கத்துக்கோ, பிரதமருக்கோ, எந்த அமைச்சருக்கோ இன்று வரை ஆறுதல் கூட சொல்லத் தோன்றவில்லை. இறந்த அனைத்து விவசாய சகோதரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த துக்கத்தை தாங்க அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்த அகம்பாவ அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் வேதனையும் போராட்டமும் நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களின் லாபங்களை உறுதி செய்வதே இந்த அர்சின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஜனநாயகத்தில் பொது உணர்வுகளை புறக்கணிக்கும் அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. மோடி அரசாங்கம் அதிகார ஆணவத்தை விட்டுவிட்டு உடனடியாக மூன்று கறுப்புச் சட்டங்களையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற்று குளிர் மற்றும் மழையில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுதான் மறைந்த விவசாயிகளுக்கு உண்மையான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
ஜனநாயகம் என்பது மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும் என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !