India

“பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை... இந்த 4 விஷயங்கள் அவசியம்” - மோடி அரசை சாடிய ப.சிதம்பரம்!

இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருப்பது குறித்து மோடி அரசை விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வெகுவாகக் குறைந்து, இந்திய வரலாற்றில் முதல் முறையாக, இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டி மோடி அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், மூன்றாவது காலாண்டின் பாதி நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலும், பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய சூழலில் 4 விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

விவசாயிகள் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற வேண்டும். ஆனால் விவசாயிகளில் குறைவான எண்ணிக்கையினரே குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுகிறார்கள். அதையும் கூட பா.ஜ.க அரசின் விவசாய மசோதாக்கள் கேள்விக்குறியாக்கிவிட்டன.

வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் கைகளுக்கு நேரடியாக பணம் சென்று சேராவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் பங்களிக்க முடியாது. அவர்கள் கையில் பணப்புழக்கம் இருந்தால்தான் சந்தையில் தேவை அதிகரிக்கும். NYAY போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இழந்த வேலைவாய்ப்புகளை மறுபடியும் கொடுப்பது அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது.

மாநில அரசுகள் 2.7 லட்சம் கோடி அளவுக்கு, மேல் மூலதன முதலீட்டை குறைக்கவிருக்கின்றன. மாநில அரசுகளிடம் கூடுதல் நிதி இல்லாவிட்டால் பணப்புழக்கம் ஏற்படாது.” எனத் தெரிவித்தார்.

Also Read: வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் இந்தியா : RBI கட்டுரை - பா.ஜ.க அரசின் சாதனை!?