India

‘ஆரோக்ய சேது’ செயலி எப்படி உருவாக்கப்பட்டது என தெரியாது - விளம்பரம் செய்த மோடி அரசின் அலட்சிய பதில்!

கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.

நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் இந்த ஆரோக்ய சேது செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனை ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்தினால் அருகில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தச் செயலி தெரிவிக்கும். கொரோனா தொற்றுள்ளவர்களாக இருப்பின் எச்சரிக்கும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆரோக்ய சேது செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகவும், எந்தவொரு மேற்பார்வையும் இன்றி தனியார் ஆபரேட்டருக்கு தரவுகளை வழங்குவதாகவும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஆரோக்ய சேது செயலியை யார் தயாரித்தது எப்படி உருவானது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை என தேசிய தகவல் மையம் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய தகவல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு கேட்டதை அடுத்து மத்திய மின்னியல் அமைச்சகம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆரோக்ய சேது இணையதளம் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதை எப்படி என விளக்கமளிக்குமாறு தேசிய தகவல் மையத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டதோடு அடுத்த மாதம் நேரில் ஆஜராகவும் கூறியுள்ளது.

Also Read: “ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த நிர்பந்திப்பது சட்ட விரோதம்” : முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கருத்து!