India
“நம் நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்துமாறு எச்சரிக்கவேண்டும்" - டி.ஆர்.பாலு வேண்டுகோள்!
"இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்" என தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்றக் தி.மு.க குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களைக் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்வதும், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும் - அவர்களின் மீன்பிடி படகுகளை ஈவு இரக்கமின்றி அடித்து உடைத்துச் சேதப்படுத்தி - வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்வதும் இலங்கைக் கடற்படையினரின் தொடர்கதையாகி வருகிறது.
இன்று நடைபெற்ற தாக்குதலில் மீனவர் ஒருவர் படு காயமடைந்துள்ளார் என்றும் - மற்ற மீனவர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்றும் கருதித் திரும்பி வந்துவிட்டார்கள் என வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது.
இலங்கை நாட்டின் கடற்படையினர் - நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதையும் - அவர்கள் மீது கொடும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கல் வீசுவதும் இரு நாட்டு நல்லுறவுகளுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத அணுகுமுறை!
மீனவர்களை அச்சுறுத்தி மனித உரிமையை - சர்வதேச விதிமுறைகளை மீறும் அப்பட்டமான அடாவடிப் போக்காகும்.
ஆனால், நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் - தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் - அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது. தங்களின் தினசரி வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கும் மீனவர்கள் நலனில் பாராமுகமாக மத்திய பா.ஜ.க அரசும் - அந்த அரசுக்கு அழுத்தம் தராமல் அ.தி.மு.க அரசும் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.
ஆகவே இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் - தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதத்திலும் துணை போகக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!