India

2021 பிப்ரவரிக்குள் 50 சதவிகித இந்தியர்களுக்கு கொரோனா ஏற்படும் - மத்திய நிபுணர் குழு அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 10 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா ஒரு புறம் கொரோனாவின் பிடியில் சிக்கி முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த படியாக உலகின் அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா கொரோனா பாதிப்பிலும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

2020 பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரையில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்திருந்தாலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இருப்பினும் வைரஸ் பரவல் இந்தியாவில் இரட்டிப்பாகும் காலம் அதிகரித்திருப்பதாக வந்த செய்திகள் சற்று மன ஆறுதலை கொடுத்திருந்த வேளையில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிபுணர் குழு புதிய எச்சரிக்கை ஒன்றினை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்தியாவில் 50 சதவிகித மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஏனெனில் எதிர்வரும் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர் காலம் என்பதாலும், பண்டிகைகள், விழாக்கள் நடைபெறக் கூடிய நாட்கள் என்பதாலும் தொற்று பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ரூபாய் நோட்டு, செல்போன் திரை போன்றவற்றில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் - ஆராய்ச்சியில் தகவல்!