India

“பா.ஜ.க அரசுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடவேண்டிய நேரமிது” - ஸ்டேன் சுவாமி கைதுக்கு கனிமொழி கண்டனம்!

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கைது நடவடிக்கையை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மைலாப்பூர் சாந்தோம் பள்ளி அரங்கில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, காங். தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.

தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி பேசுகையில், “பாராளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பி வருகின்றோம். ஆனால் பா.ஜ.க-விற்கு இருக்கும் பெரும்பான்மை அவர்களுக்கு சாதகமாக உள்ளது.

தொடர்ந்து நம்மை தெருவுக்குக் கொண்டு வந்து போராட வைக்கும் ஆட்சிதான் இங்கு நடைபெற்று வருகிறது. விவசாயிகள், இஸ்லாமியர்கள், புதிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை என தொடர்ந்து தவறான திட்டங்களை கொண்டு வருகின்றனர்.

இந்த ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லாமல் இருக்க முடியாது. இந்த நாட்டில் விவாதம், ஜனநாயகம் அழைக்கப்பட வேண்டும் என்று இந்த ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த அரசாங்கம் சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்துகிறது.

மத்திய அரசு மக்களுக்கு எதிராக கொண்டு வரும் சட்டங்களை தி.மு.க எதிர்த்து வருவதால்தான் தற்போது 2 ஜி வழக்கை தினந்தோறும் விசாரித்து வருகின்றனர். அதைப்பற்றி கவலையில்லை.

சுற்றுச்சூழலை முற்றிலும் அழிக்கக்கூடிய ஆட்சி இது. கல்வி உரிமைகள், அடிப்படை ஜனநாயக உரிமை அழிக்கும் ஆட்சி தான் பா.ஜ.க ஆட்சி. கடந்த கால அடிமை வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பது தான் இவர்கள் கனவு.

பெரியாரின் நிலைப்பாட்டை நாம் கையில் எடுக்கவேண்டிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சிக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிர் போகும் நிலை வந்தாலும் போராட வேண்டும், போராடி நாட்டை மீட்டெடுப்போம்.” எனப் பேசினார்.

Activist Stan Swamy

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், “ஜார்கண்ட்டிலுள்ள மலைகளின் வளங்கள் அங்கு வாழும் பழங்குடியினருக்கே சொந்தம் என உச்சநீதிமன்ற தீர்ப்பே இருக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். எமர்ஜென்சியை விட மோசமான நிலையில் தேசம் தற்போது இருக்கிறது” எனப் பேசினார்.

வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், “மாநில அரசை கலந்தாலோசிக்காமல், மாநில நீதிமன்றங்களை மீறி தேசிய புலனாய்வு அமைப்பால் மாநிலத்திக்குள் விசாரணை நடத்த முடியும். மாநில அதிகாரங்களுக்கும் , சுயாட்சிக் கொள்கைக்கும் எதிரான அமைப்பு என்.ஐ.ஏ , எதிரான சட்டம் ஊஃபா” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட 16 பேர் கைதாகி 2 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஸ்டேன் சுவாமி கைதை எதிர்த்துள்ளார். அரசியல் எண்ணமின்றி சமூக நீதிக்காக போராடியவர் ஸ்டேன். பட்னாவிஸ் அரசு இருந்தவரை மாநில அரசு விசாரித்த வழக்கு , ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எப்.ஐ.ஏ கையில் எடுத்துள்ளது.

பொய்யான செய்தியை பரப்ப சமூக ஊடகங்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது. ஆட்சியமைக்க 51 விழுக்காடு வாக்கு வங்கி போதுமானது என பா.ஜ.க எண்ணுகிறது. கொரோனாவை பயன்படுத்தி தாம் விரும்பிய சட்டம் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்கள் பா.ஜ.கவினர்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “பழனிசாமியின் ஒரே அறிக்கையில் பத்து பச்சைப்பொய்கள்...” - முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்!