India

“ஆத்மநிர்பார் திட்டத்தால் சில நிறுவனங்கள் மட்டுமே வளரும்; பொருளாதார பலன் இல்லை” - ரகுராம் ராஜன் பேச்சு!

இந்தியா போன்ற வளரும் நாடுகள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர உடனடியான நிவாரண உதவிகள் அளிக்கத் தயங்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜி-20 மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரணமாக சிறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மட்டுப்படுத்த, உடனடியான நிவாரண உதவிகள் அளிக்க மத்திய அரசு பெரிய அளவில் செலவு செய்யத் தயங்கக் கூடாது.

நிவாரணப் பணிகளையும், பொருளாதார ஊக்கப் பணிகளையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. பொருளாதாரத்தை உந்தித் தள்ளுவதற்கு வழங்கப்படுவதுதான் ஊக்கத் திட்டங்கள். நிவாரணத் திட்டங்கள் என்பது குறு, சிறு நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடுவது.

பா.ஜ.க அரசின் ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரம் எனும் பெயரில் வெளிநாட்டு வர்த்தகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது. உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்போம் எனும் பாதுகாப்பு வாதத்தால் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளரும்.

இப்போதுள்ள நிலையில் இந்தியாவுக்கு உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி அவசியம். அதாவது வெளிநாடுகளில் இருந்து மிகக்குறைந்த விலையில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அதை நிறைவு செய்த பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்.

மற்ற நாடுகளுடன் வரிப் போரை உருவாக்கக் கூடாது. ஏனென்றால் இறக்குமதி வரியை அதிகப்படுத்தும் பல்வேறு திட்டங்களை மற்ற நாடுகள் செய்து அது தோல்வியில்தான் முடிந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தன்னிறைவிலிருந்து வெளிவந்து அர்த்தமுள்ள எதையாவது செய்யவேண்டும்” - மோடி அரசுக்கு ரகுராம் ராஜன் அறிவுரை!