India

ஹத்ராஸ் சம்பவம் : பா.ஜ.க அரசுக்கு எதிராக தி.மு.க தலைமையிலான ஊடகக் கண்காணிப்புக் குழு கண்டன தீர்மானம் !

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான உத்தரப் பிரதேச அரசின் இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்களும் அவர்களது அமைப்புகளும் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என தி.மு.க தலைமையிலான ஊடகக் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாரு :-

“உத்திரப் பிரதேசம் ஹாத்ரசில் தலித் சமூகத்தைச் சார்ந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வை வன்மையாக கண்டிப்பதோடு அந்த பெண்ணின் பெற்றோருடைய தொலைபேசிகளை

1. உத்தரப்பிரதேச காவல்துறை சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டு கசிய விட்டுள்ளது. அவர்களிடம் பேசிய ஊடகவியலாளர்களின் போன்களும் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளன. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த சட்டவிரோதப் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

2. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியதோடு பெண் ஊடகவியலாளர்களை கண்ணியக் குறைவாக நடத்திய காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது.

3. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான உத்தரப் பிரதேச அரசின் இந்த சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்களும் அவர்களது அமைப்புகளும் உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது

4. உத்தரப் பிரதேச அரசின் இந்த சட்ட விரோத போக்கை கண்டித்தும் இதற்கு உறுதுணையாக ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், திரு.ராகுல் காந்தி மற்றும் திருமதி. பிரியங்கா காந்தி இருவரும் தங்களுக்கு பாஜக அரசாலும் காவல்துறையாலும் ஏற்பட்ட இன்னல்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதன் மூலம் பாசிச சக்திகளை உலக அளவில் அடையாளப் படுத்திய இருவரையும் மனதார பாராட்டுகிறது.

6. இந்த கொடூர சம்பவத்தை தமிழகத்தில் வன்மையாக கண்டித்த தி.மு.க மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளை பாராட்டுவதோடு, நாளை 5/10/20 அன்று இச்சம்பவத்தை கண்டித்தும் ஊடகத்திற்கு எதிரான பா.ஜ.க அரசின் எதேச்சாதிகார போக்கை கண்டித்தும் திமுகவின் மகளிரணி சார்பில் பேரணி நடத்தி ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்க அறிவுறுத்திய தி.மு.க தலைவரை பாராட்டுவதோடு அந்த பேரணி வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளன.