India

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7% அதிகரிப்பு- NCRB தகவல்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை, சைபர் குற்றங்கள், கடத்தல், கொலை போன்ற குற்றங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக, “இந்தியாவில் குற்றங்கள் -2019” என்ற தலைப்பில், தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி)) அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி., நாடு முழுவதும் இருந்து குற்றத் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 53 பெருநகரங்களில் இருந்து தரவுகளை சேகரித்து மூன்று பிரிவுகளாக அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விட தற்போது 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 2018ம் ஆண்டு நாட்டில் பெண்களுக்கு எதிரான 3,78,236 குற்றச் சம்பவங்கள் பதிவாகின. அதே 2019ம் ஆண்டு 7.3% குற்றங்கள் அதிகரித்து 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலானவை 'கணவர் அல்லது உறவினர்களால் கொடுமை நடத்தப்படும் கொடுமை 30.9 சதவீதமும், பெண்கள் மீதான தாக்குதல் 21.8 சதவீதமும், பெண்கள் கடத்தல் 17.9 சதவீதமும் உள்ளதாக தரவு காட்டுகிறது.

அதேபோல், 2019ம் ஆண்டில் 1 லட்சம் பெண்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் குற்ற விகிதம் 62.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2018ம் ஆண்டு 58.8 சதவீதமாக இருந்தது. அதுமட்டுமல்லாது 2019ல் 32,260 பாலியல் பலத்தகார வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பெண்களைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் 2018ம் ஆண்டைவிட 2019ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2018ம் ஆண்டு நாட்டில் குழந்தைளுக்கு எதிரான 1,41,764 குற்றச் சம்பவங்கள் பதிவாகின. அதே 2019ம் ஆண்டில், 1,48,185 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில், 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்களும் நடந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஒவ்வொரு மணி நேரமும் 4 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிர்ச்சித் தகவல்!