India

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பா.ஜ.க அரசுக்கு தலையசைக்கும் எடப்பாடி அரசை பதவி விலகக் கோரி CPIM போராட்டம்!

வேளாண்சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேற்றபட்டதை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், விவசாய சங்க பிரதிநிதிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர் அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க அரசுக்கு தலையசைக்கும் மாநில அரசு பதவி விலகக் கோரியும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்கள் பொதுச் செயலாளரான சண்முகம், “விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதற்கு பா.ஜ.க அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மசோதாக்களை திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை உட்பட 500 இடங்களில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டதில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரையும் தாண்டி பேரணியாக சென்ற அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

சிறிது நேரம் நீடித்த இந்த சாலை மறியலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு போலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.

Also Read: “கழிவுநீர் தொட்டிகளில் விஷவாயு தாக்கி 288 பேர் உயிரிழப்பு” : தி.மு.க எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்!