India

பிளாஸ்மா சிகிச்சை இறப்பை குறைக்கவில்லை - ICMR ஆய்வு முடிவில் வெளிப்பட்ட அதிர்ச்சி தகவல்! #CoronaUpdates

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை இறப்பு விகிதத்தை குறைக்கவில்லை என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரம் சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. இதுவரஒ 43 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படாத நிலையில், தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து பல மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்து குணமானவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள இம்யூனோ குளோபுளின் G-யை கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தி அதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதே பிளாஸ்மா சிகிச்சை.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 39 மருத்துவமனைகளில், 'பிளாசிட்' ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்டது. இதில் கொரோனா பாதிப்புக்குள்ளான 464 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் 235 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 229 பேருக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதரப்பிலும் தலா 17 பேருக்கு கொரோனா தீவிர நிலையில் இருந்தது.

28 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்ட நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 34 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். சாதாரண சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 31 பேர் பலியாகினர்.

இந்த ஆய்வின் மூலம், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்க பிளாஸ்மா சிகிச்சை பெரிதாக பலனளிக்கவில்லை என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. எனினும், தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.