India

காஷ்மீரில் மொஹரம் ஊர்வலம் சென்றவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் - 19 ஷியா முஸ்லிம்கள் படுகாயம்!

இஸ்லாத்தின் இறைத்தூதர் நபிகளின் பேரனான இமாம் ஹுஸைன் அவருடைய 71 குடும்ப உறுப்பினர்களோடு கர்பாலா போரில் வீர மரணமடைந்ததை நினைவு கூறும் நாளே முகரமாக ஷியா முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷியா முஸ்லிம்கள் சிலரை காவல்துறை கைது செய்து, 144 தடை உத்தரவும் போட்டிருந்தது. அதே போல் ஷியா அமைப்புகளும் இந்த ஆண்டு கோவிட் 19 நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு ஊர்வலம் நடத்தப்படாது என அறிவித்திருந்தது. ஆனாலும் இதை மீறி சில இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தடைமீறி நடத்தப்பட்ட ஊர்வலத்தைக் கலைப்பதற்கு போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 12 பேர் ரப்பர் குண்டுகள் தாக்கி கடுமையான காயத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், குறிப்பாக, ரப்பர் குண்டுகள் பாய்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகருக்கு வெளியே மொஹரம் ஊர்வலத்தை ஷியா முஸ்லிம்கள் நடத்தியபோதும், மற்றொரு பகுதியான காவ் கடல் பகுதியில் நடத்தியபோதும் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தலையிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், கோவிட் 19 நோய்த்தொற்று அதிகம் இருக்கும் காலத்தில் மொஹரம் ஊர்வலம் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தும், ஊர்வலம் நடத்தப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினராலும், காவல்துறையினராலும் பயன்படுத்தப்படும் ரப்பர் குண்டு துப்பாக்கிகளால் கால் மூட்டுக்குக் கீழேதான் சுடவேண்டும் என்ற விதி இருந்தும், மக்களின் முகம் உடல் பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆண்டு முழுக்கவே பள்ளிகளைக் காணாத காஷ்மீர் மாணவர்கள்” - கல்வியில் துளியும் அக்கறை செலுத்தாத பா.ஜ.க அரசு!