India
“மன்னிப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை; வழக்கை வாபஸ் பெறுங்கள்” - பிரசாந்த் பூஷன் தரப்பு வாதம்!
உச்சநீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்து ட்விட்டரில் கூறிய கருத்து குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மன்னிப்புக் கேட்க வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது உச்சநீதிமன்றம்.
நேற்றோடு அந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் பிரசாந்த் பூஷன், “மன்னிப்புக் கேட்பதுதான் என் மனசாட்சியையும், உச்சநீதிமன்றத்தையும் அவமதிப்பு செய்வதாக இருக்கும். எனவே எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்டனர். அதற்கு அவர், “பிரசாந்த் பூஷனை இந்த முறை எச்சரித்து விடலாம், தண்டனை தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தவறு செய்யவில்லை என்று நினைக்கும் ஒருவரை என்ன செய்வது என்றும் அனைத்து நீதிபதிகள் மீதும் புகார் எழுப்பினால் நீதித்துறை பாதிப்புக்குள்ளாகிவிடாதா என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்டர்னி ஜெனரல், நீதிபதிகள் கருணையுடன் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அது நீதிமன்றத்தின் மகத்துவத்தை உயர்த்தும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற பிரஷாந்த் பூஷனுக்கு அவகாசம் வழங்கி வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பிற்பகலில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியபோது, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற உத்தரவே தவறானது, மன்னிப்பு என்பது மனதிலிருந்து தானாக வரவேண்டும் என்று பிரசாந்த் பூஷன் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதிட்டார்.
மேலும், இந்த நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெறும் பல நிகழ்வுகளால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம். நீதிமன்றம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்று கூறிய அவர், பிரசாந்த் பூஷன் தனது நிலைப்பாட்டிலிருந்து மாற விரும்பவில்லை என்றும் அவர் மீதான வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்றும் ராஜிவ் தவான் வாதிட்டார்.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அருண்மிஸ்ரா, “மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? மன்னிப்பு என்பது ஒரு மந்திரச்சொல், இது பல விஷயங்களை குணப்படுத்தும்” என்று கருத்து தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!