India

“மோடி ஆட்சியில் இனி வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை” : வாகன விற்பனை கடும் சரிவை சந்திக்கும் - ‘ACMA’ அறிக்கை!

கொரோனா ஊரடங்கு மற்றும் பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை கடும் சரிவை சந்திக்கும் என இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (Automotive Component Manufacturers Association, ACMA) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடரால், ஆட்டோமொபைல் துறை ஒரு காலாண்டு முழுவதும் இழப்பை சந்தித்துள்ளது.

இதனால், நடப்பு நிதியாண்டில், கார்கள், எஸ்.யு.வி, வேன்கள் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை 19.1 லட்சம் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட பல மடங்கு குறைவாகும்.

அதேப்போல், இருசக்கர வாகன விற்பனையும் வெறும் 1.2 கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2011 - 2012ம் ஆண்டில் விற்பனையான 1.34 கோடி என்ற எண்ணிக்கையைவிட குறைந்த அளவாகும். அதாவது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை கடும் சரிவை சந்திக்கும்.

மத்திய அரசு, வாகனங்களுக்கு 28 சதவீதம் முதல் 60 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கிறது. இதனால் லாபம் 3 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை மட்டும்தான் கிடைக்கும். அதாவது, வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு கிடைக்கும் லாபம் 3 சதவீதம், பயணிகள் வாகனங்களுக்கு 5-6 சதவீதம், இருசக்கர வாகனங்களுக்கு 9 சதவீதம் மட்டும்தான் கிடைக்கும் என இருக்கும்.

எனவே, வாகன விற்பனையை அதிகரிக்க விலையை குறைத்து விற்க ஏதுவாக, ஜி.எஸ்.டி-யில் 10 சதவீதம் குறைக்கவேண்டும். அதேப்போல், பழைய வாகனங்களை மாற்றுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பு திட்டங்களை அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் ஏற்படும் பாதிப்பு குறித்த கணிப்பை கனரக தொழிற்சாலைகள், சாலை போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளுக்கு, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

Also Read: "சரிவை தடுக்க ஜி.எஸ்.டி-யை குறையுங்கள்"- மத்திய அரசுக்கு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வலியுறுத்தல்