India

“மன்னிப்புக் கேட்பதுதான் நீதிமன்றத்தையும், மனசாட்சியையும் அவமதிப்பாக இருக்கும்” - பிரசாந்த் பூஷன் பதில்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.

இதையடுத்து பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்து ஆகஸ்ட் 20ம் தேதி தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த பிரசாந்த் பூஷன் மன்னிப்புக் கேட்க முடியாது எனத் தெரிவித்தார். அவரது தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை வழங்கினாலும், அது அவர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே நிறைவேற்றப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷனுக்கு இன்று வரை கால அவகாசம் அளித்தது. கால அவகாசம் முடிவடையும் நிலையில், தன்னுடைய கருத்து குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நீதிமன்றத்தின் முன் நான் என்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றால் அது நேர்மையற்ற வகையில் மன்னிப்பு கோருவதாக அமையும்.

அது எனது மனசாட்சியையும் நான் மிக உயர்ந்ததாகக் கருதும் நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக அமையும். எனவே, நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Also Read: பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்ற தீர்ப்பு மோசமான முன்னுதாரணம் - வெடிக்கும் சர்ச்சை!